×

கொரோனாவால் சீனாவில் இருந்து இறக்குமதி பாதிப்பு பிரிண்டர்களுக்கான மை விலை அதிகரிப்பு ஓரிரு மாதத்தில் கடும் தட்டுப்பாடு ஏற்படும்

வேலூர், மார்ச் 17: கொரோனா பரவுவதால் சீனாவில் இருந்து இறக்குமதி பாதிக்கப்பட்டு, பிரிண்டிங் இயந்திரங்களுக்கான மை விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் ஓரிரு மாதங்களில் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நீடிக்கிறது.
கொரோனா வைரஸ் பரவுவதால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளது. இந்நிலையில், பிரிண்டிங் இயந்திரங்களுக்கான மை, பவுடர் ஆகியன பெரும்பாலும் சீனாவில் இருந்துதான் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால், பிரிண்டிங் மை விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் ஓரிரு மாதங்களில் பிரிண்டிங் மை, பவுடர் ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்று இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து பிரிண்டிங் மை விற்பனையாளர்கள் கூறுகையில், ‘கலர் பிரிண்டிங் இயந்திரங்களுக்கு மையும், பிளாக் அண்ட் ஒயிட் பிரிண்டர்களுக்கு பவுடரும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மை, பவுடர் பெரும்பாலும் சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக பிரிண்டர்களுக்கான மை, பவுடர் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு லிட்டர் ₹3,300 வரை விற்பனை செய்யப்பட்ட பிரிண்டிங் மை தற்போது ₹3,600 வரை விற்பனை செய்யப்படுகிறது. பிரிண்டர்களுக்கான பவுடர் கிலோ ₹800க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ₹1000 முதல் 1200 வரை விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் இருந்து நேரடியாக பிரிண்டர்களுக்கு பவுடர் இறக்குமதி செய்தால் கிலோ ₹700க்கு கிடைக்கும்.

ஆனால், போக்குவரத்து செலவு கூடுதலாகும். இதேநிலை நீடித்தால், ஓரிரு மாதங்களில் பிரிண்டர்களுக்கான மை, பவுடர் ஆகிவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும். எனவே, பிரிண்டர்களுக்கான மை, பவுடர் ஆகியவற்றை அதிகளவில் கொள்முதல் செய்து பதுக்கி வைக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, அதிகாரிகள் கண்காணிக்க வேண்டியது அவசியம்’ என்றனர்.

Tags : China ,Corona ,shortages ,
× RELATED தென் சீன கடலுக்கு பயணம்: 3 இந்திய போர் கப்பல்கள் சிங்கப்பூர் சென்றடைந்தன